Saturday, June 6, 2020

Tuesday, June 2, 2020

வருமான வரித்துறையின் புதிய ஆயுதம்!

இந்தியாவின், 2020 – 21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் காண்பிக்கப்பட்ட செலவு ரூ.30.42 லட்சம் கோடி. அரசு இப்படி செலவு செய்வதற்கு உள்ள முக்கிய நிதி ஆதாரம், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை கொஞ்சம் விற்பதன் வாயிலாக, அரசு, வருவாய் பார்க்க முடியும். வரியினங்கள் வசூலானால் தான், அரசு தாராளமாக செலவு செய்ய இயலும்.
7 சதவீதம் கூட இல்லை
மத்திய அரசுக்கு, 2018–19ம் ஆண்டில் வசூலான மொத்த வரித்தொகை, ரூ.20.76 லட்சம் கோடி. அதில் வருமான வரி போன்ற நேரடி வரிகள் வாயிலாக வசூலானது, ரூ.11.37 லட்சம் கோடி. இந்தியாவில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 7 சதவீதம் கூட இல்லை. 2018– 19ம் ஆண்டில், 8.45 கோடி பேர் வரிசெலுத்தினர். அதற்கு முந்தைய ஆண்டில் வரி செலுத்தியோர், 7.42 கோடி பேர்.அரசுக்கு, வரியினங்கள் திட்டமிட்டபடி வசூலானால், மக்கள் நலத்திட்டங்கள் உயிர்பெறும். நாடு வளம் பெறும். ஆனால், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் இலக்கு அளவுக்கு வரியினங்கள் வசூலாவதில்லை. பொருளாதார மந்த நிலை, இயற்கை பேரிடர், உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், வரியினங்கள் வசூலாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.இம்முறை, இந்தியாவுக்கு, கொரோனாவால் நேரடி, மறைமுக வரியினங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு நிவாரணமாக, ரூ.20 லட்சம் கோடி மதிப்புக்கு சலுகைகள், பேரிடர் உதவி தொகைகளை, மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. தவிர, மக்கள் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து செலவிட, அரசுக்கு பணம் வேண்டுமே.

டியர் குடிமகனே!
மத்திய நேரடி வரி வாரியம், ஆண்டுதோறும், வரிதாரர்கள் சமர்ப்பிக்கும் வருமான வரி தாக்கலுடன் வழங்கப்படும், படிவம் 26 ஏ.எஸ்., (வருடாந்திர ஒருங்கிணைந்த வரி வரவு அறிக்கை)யை புதுப்பித்து அதில், புதிய விதி 114–ஐ என்பதை இணைத்திருக்கிறார்கள். இது, ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.புதிய விதியால், வருமான வரித்துறைக்கு எப்படி வருவாய் கொட்டும் என்று யோசிக்கிறீர்களா? மோடி அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற வலுவான இணைய தொழில்நுட்ப அடித்தளமே, தற்போது அரசு கஜானாவுக்கு காசு கொண்டுவரப்போகிறது. வருமான வரியை குறைத்து காட்டுபவர்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டு, ‘டியர் குடிமகனே, நீங்கள் செலுத்த வேண்டிய வரியை கட்டிவிடுங்கள்’ என, வரித்துறை அன்புக்கட்டளையிட போகிறது.நான் ஆரம்ப நாட்களில் பல முறை யோசித்திருக்கிறேன். ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வருமானத்தின் அடிப்படையில் தான், வரி செலுத்தப்போகிறார்கள். அப்புறம் எதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், வருமான வரித்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்கள் என்று. பின்பு தான் ஒரு நிதர்சனம் புலப்பட்டது.முறையாக வருமான வரி கட்டாதவர்கள், வரியே கட்டாமல் ஏய்ப்பவர்கள், கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் போன்றோரை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து, வரி வசூல் செய்வதற்கே, வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் இலக்கு நிர்ணயிக்கப்படுவது புரிந்தது.

வருவாய் தரும் டிஜிட்டல்




நேரடி வரி வருவாயை அதிகரிக்க செய்யும் ஒரு மவுனப் புரட்சி தான், படிவம் 26 ஏ.எஸ்., உடன் இணைந்த விதி 114–ஐ. அதன்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடும், நாட்டின் மொத்த மக்களின் நடவடிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுகிறது.படிவம் 26 ஏ.எஸ்., என்பது, ஒரு வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பாஸ் புக்’ போன்றது. ஐ.டி.ஆர்., (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) தாக்கல் செய்யும்போது, படிவம் 26 ஏ.எஸ்., ஐ சரிபார்க்க வேண்டும். அதில், வரிதாரரின் அட்வான்ஸ் டாக்ஸ், டி.டி.எஸ்., டி.சி.எஸ்., போன்றவற்றின் வாயிலாக எவ்வளவு வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான், இதுநாள் வரை சொல்லப்பட்டிருந்தது.புதிய முறைப்படி, ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வரிதாரரின், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அத்தனையும் பட்டியலிடப்பட்டு, வருமான வரித்துறையின் இணையதளத்தில் காண்பிக்கப்படும். வரிதாரரும் அதை இணையதளத்தில் சென்று பார்வையிட முடியும்.

பக்கா டெக்னாலஜி
தற்போது, பான் கார்டு, ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் போன்றவை, ஒன்றொடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வரிதாரருக்கு, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வருமானம் வந்தாலோ அல்லது அவர் செலவு செய்திருந்தாலோ, அது டிஜிட்டல் பரிவர்த்தனையாக இருந்தால், மேற்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் நடந்திருந்தால், அவை வருமான வரித்துறை இணையதளத்தில், வரிதாரரின் பக்கத்துக்கு சென்றுவிடும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை அது, ‘அப்டேட்’ ஆகும். ஒரு வரிதாரரின், அன்றாட பண பரிவர்த்தனைகளின் மொத்த ஜாதகமும் இணையத்தில் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிடும். அதற்கேற்ப, வருமான வரித்துறையின் இணையதள தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் உள்ள, ‘ஆட்டோ பில்லிங் பார்ம்’ போல, அளிக்கப்படும் ஆன்லைன் ‘கணக்கு, வழக்கு’களை ‘ஆம்’, ‘இல்லை’ என்று உறுதி செய்து, ஒரு ‘என்டர் பட்டனை’ தட்டினால்போதும், தங்கள் வரியை, ஒரு வரிதாரர் தாங்களே செலுத்திவிடும் காலம் வெகுதூரமில்லை.

புதிரா? புன்னகையா?
புதிய விதியின்படி, வரிதாரரின் ஆண்டு நிதி தகவல்களில், எந்தெந்த நடவடிக்கைகள் இணையதளத்தில் பட்டியலிடப்படும் என்று பார்ப்போமா?படிவம் 26 ஏ.எஸ்.,ல், முன்பு டி.டி.எஸ்., டி.சி.எஸ்., வரிப்பிடித்தங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது என அறிந்தோம். தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் வாங்குவது, விற்பது, சொத்துகள் பரிவர்த்தனை, சேவைகள், வேலை ஒப்பந்தங்கள், முதலீடுகள், செலவுகள், கடன்கள், டெபாசிட், வருமான வரி ‘ரிபண்ட்’, மறு மதிப்பீடு போன்ற, வருமான வரி கோரிக்கைகள், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் மற்றும் முடிக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும், 26 ஏ.எஸ்-.,படிவத்தில் பகிரப் படும்.

அதேபோல, கஸ்டம்ஸ், ஜி.எஸ்.டி, பினாமி சட்டங்களின் கீழ் நடக்கும் நிறுவனத்தின் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில், ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதுபற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.மேலும், வரி செலுத்துவோருக்கு நாடு கடந்து, வெளிநாட்டில் கிடைக்கும் வருமானம் அல்லது சொத்துக்கள் குறித்து, வரித்துறை பெற்ற தகவல்களும் இதில் குறிப்பிடப்படும். இதனால், நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வரிதாரரின் முழு நடவடிக்கைகளும் இணையதளம் வாயிலாக தெரியவரும்.

அதேபோல, இனி, கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரசு அமைப்புகளும், இவற்றை பயன்படுத்த முடியும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, வரிதாரரின் நிதி நடவடிக்கைகள் இதில் அப்டேட் ஆகும். ஆண்டு இறுதியில், அவற்றை உறுதிப்படுத்துவது மட்டும்தான் வரி செலுத்துபவரது வேலையாக இருக்கும். நிதி நடவடிக்கைகளை மறைக்க நினைக்கும் வரிதாரர்களுக்கு, இது ஒரு புதிரே. சரியாக, முறையாக வரிக்கட்ட விரும்புபவர்களுக்கு, இது புன்னகை.

https://business.dinamalar.com/news_details.asp?News_id=46841&cat=1