Thursday, May 28, 2020

10 - உருத்திர பசுபதி நாயனார்


பெயர்: உருத்திர பசுபதி நாயனார்

குலம்: அந்தணர்
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்: தலையூர்
முக்தித் தலம்: தலையூர்

வரலாறு சுருக்கம்:

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்”
-திருத்தொண்டத் தொகை

வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது.

எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க.

சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓடியவரை பற்றி அறியலாம்...

பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார்.

இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார்.

இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய சிவபெருமான் காட்சி அளித்து இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.முக்தியும் அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார்.

No comments:

Post a Comment