Friday, May 15, 2020

TDS&TCS வரி: 25 சதவீதம் குறைக்கப்பட்டது

புதுடில்லி:ஈவுத் தொகை, காப்பீட்டுத் தொகை, வாடகை, வல்லுனர் கட்டணம், அசையா சொத்துகள் வாங்கும் போது செலுத்தப்படும் வரிகள் ஆகியவை, வரும் ஆண்டு, மார்ச், 31ம் தேதி வரை, 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக, வரித் துறை தெரிவித்து உள்ளது.


சம்பளப் பட்டியலில் இடம் பெறாமல், சன்மானம் மூலம் பணம் ஈட்டுபவர்கள் வருவாயில் பிடித்தம் செய்யப்படும், டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., ஆகிய வரிகளின் அளவு குறைக்கப்படும் என்று, நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை தொடர்ந்து, நேரடி வரி விதிப்புக்கான மத்திய ஆணையம், திருத்தப்பட்ட வரி விகிதங்களை அறிவித்துள்ளது.இது, நேற்று முதல், அடுத்த ஆண்டு, மார்ச், 31 வரை அமலில் இருக்கும்.



வாய்ப்பு


கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளில் இருந்து, நிறுவனங்களும், வரி செலுத்துவோரும் மீள்வதற்காக, நிதியமைச்சர் அறிவித்த எண்ணற்ற திட்டங்களில் ஒன்று, டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரிக்குறைப்பு. இதன் மூலம், மக்கள் கையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கையிருப்பு சேருவதற்கான வாய்ப்புண்டு. நேரடி வரிவிதிப்புக்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள



அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களாவது: பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும்போது வசூலிக்கப்படும், டி.சி.எஸ்., வரி, 1 சதவீதத்தில் இருந்து, 0.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும், 23 பொருட்கள் மீதான, டி.டி.எஸ்., வரி குறைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்ட முதிர்வின் போது பெறும் தொகையின் மீதான, டி.டி.எஸ்., வரி, 5 சதவீதத்தில் இருந்து, 3.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.


இதேபோல், ஈவுத் தொகை பெறும்போதோ, முதலீட்டுக்கான வட்டியைப் பெறும்போதோ, அசையா சொத்துகளில் இருந்து வாடகை பெறும்போதோ செலுத்த வேண்டிய, 10 சதவீத, டி.டி.எஸ்., வரி, தற்போது, 7.5 சதவீதமாக ஆகியிருக்கிறது.மேலும், அசையா சொத்துகளை வாங்கும்போது, செலுத்தும் தொகைக்கான, டி.டி.எஸ்., வரி, 1 சதவீதத்தில் இருந்து, 0.75 சதவீதமாக மாறியுள்ளது.


தனிநபர்களோ, ஹிந்து கூட்டுக்குடும்பமோ செலுத்தும் வாடகை தொகையில் செலுத்த வேண்டிய, டி.டி.எஸ்., வரியும், 5 சதவீதத்தில் இருந்து, 3.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, 1 சதவீத, டி.டி.எஸ்., வரி, தற்போது, 0.75 சதவீதமாக குறைந்துள்ளது. வல்லுனர் கட்டணத்துக்கு செலுத்தப்பட வேண்டிய, 2 சதவீத, டி.டி.எஸ்., வரி, 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.



தெளிவு


தேசிய சேமிப்பு பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், முதிர்வடையும்போது செலுத்தப்பட வேண்டிய, டி.டி.எஸ்., வரியான, 10 சதவீதம், தற்போது, 7.5 சதவீதமாக மாறியுள்ளது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஈவுத்தொகை வழங்கும்போது செலுத்தவேண்டிய, டி.டி.எஸ்., வரி, 10 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.


பான் மற்றும் ஆதார் விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையெனில், டி.டி.எஸ்., அல்லது டி.சி.எஸ்., வரிகள் குறைக்கப்பட மாட்டாது; அதிகமாக வரியையே அந்நிறுவனங்களோ, தனிநபர்களோ செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நேரடி வரிவிதிப்புக்கான மத்திய ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.


டி.டி.எஸ்., வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம், சம்பளம் பெறாத பணியாளர்கள் மத்தியில் கூடுதல் தொகை கையிருப்பில் இருக்கும். அதன்மூலம், நம் பொருளாதாரத்தில் நிதிச் சுழற்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


https://business.dinamalar.com/news_details.asp?News_id=46756&cat=4


No comments:

Post a Comment