Thursday, May 14, 2020

நிவாரணம் 2020!ரூ.20 லட்சம் கோடி HIGHLIGHT

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்


இந்தப் பிரிவினருக்கு ஆறு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

1. இந்தத் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் வாங்குவது முதல், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, தொழிலை மீண்டும் துவங்குவது வரை பல பிரச்னைகள் உள்ளன. அதையடுத்து, அவர்களுக்கு உள்ள மொத்த கடனில், 20 சதவீதம், சிறப்புக் கடனாக வழங்கப்படும் .இவ்வாறு, ௩ லட்சம் கோடி ரூபாய்க்கு, பிணையில்லா கடன் வழங்கப்படும். மொத்தம், 25 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்துள்ள, 100 கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்கள், இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தம், நான்கு ஆண்டுகளுக்கானது இந்தக் கடன். அதில், முதல் ஆண்டில் அசலை செலுத்த வேண்டியதில்லை. வரும், அக்., 31 வரை, இந்தக் கடன் வசதியைப் பெறலாம். இதன் மூலம், 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

2. ஏற்கனவே கடுமையான கடனில் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய், கூடுதல் கடனாக வழங்கப்படும். இதற்காக சிறப்பு நிதித் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம், இரண்டு லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். வாராக் கடனில் உள்ள நிறுவனங்களும், இதைப் பெறலாம்.

3. ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள், விரிவுபடுத்த நிதியில்லாமல் திண்டாடும் நிலையும் உள்ளது. இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, நிதித் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, முதலீடுகள் இந்தத் துறையினருக்கு கிடைக்கும்.

4. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் தொகுப்பில், யார் யார் சேர்க்கப்படுகின்றனர் என்பதில் திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, அதிக தொகை முதலீட்டாளர்களும் சேர்க்கப்படுகின்றனர்; மொத்த விற்றுமுதலை கூடுதலாகப் பெற்றுள்ளவர்களும் சேர்க்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, நேற்று வரை, 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்பவையே, குறு நிறுவனங்களாகக் கருதப்பட்டன; இன்று முதல், 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களும், குறு நிறுவனங்களாகக் கருதப்படும். அதேபோல், 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களும், குறு நிறுவனங்களாகக் கருதப்படும். இது சேவைத் துறையினருக்கும் பொருந்தும்.இந்த இரு துறையினரும், இனி பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

5. அரசின், 200 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு, இனி சர்வதேச, 'டெண்டர்' கோரப்படாது. இதன் மூலம் இந்தத் துறையினர், அரசு டெண்டரை அதிக அளவில் பெற முடியும். இது சுய சார்புக்கான நடவடிக்கை; மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தையும் ஊக்குவிக்கும்.

6 . வைரஸ் பாதிப்பு உள்ளதால், தொழில் கண்காட்சிகள் உள்ளிட்டவை நடப்பதற்கு, சாத்தியம் இல்லை.எனவே, சிறு, குறு நிறுவனங்கள், தங்கள் பொருட்களை இ- மார்க்கெட்டிங் எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். மேலும், இந்தத் துறையினருக்கு அரசு நிலுவை வைத்துள்ள அனைத்து தொகைகளும், 45 நாட்களுக்குள் அளிக்கப்படும்.

வருங்கால வைப்பு நிதி


1.பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியில், ஏற்கனவே சில சலுகை அளிக்கப்பட்டது.அதாவது, 100 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களில், மாத சம்பளம், 15 ஆயிரத்துக்கு குறைவாக பெறுவோர், 90 சதவீதம் இருந்தால், நிறுவனம் செலுத்த வேண்டிய, 12 சதவீத தொகை மற்றும் ஊழியருக்கான, 12 சதவீத தொகையை, மத்திய அரசே ஏற்கும் என, அறிவித்திருந்தோம்.அதன்படி, மார்ச், ஏப்., மே மாதம் வரை வழங்கியுள்ளோம். இதன் மூலம், 3.67 லட்சம் நிறுவனங்களைச் சேர்ந்த, 72.2 லட்சம் தொழிலாளர்களுக்காக, 2,500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தொகையையும், மத்திய அரசே செலுத்தும்.

2. பி.எப்., திட்டத்துக்காக தற்போது, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து, தலா, 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு, 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும்; நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இதன் மூலம், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கூடுதல் பணப் புழக்கம் இருக்கும்.
நாடு முழுதும், 6.5 லட்சம் நிறுவனங்கள் மற்றும் 4.3 கோடி ஊழியர்கள் கையில், 6,750 கோடி ரூபாய் பணப் புழக்கம் இருக்கும்.மத்திய மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களுக்கு, இந்தச் சலுகை
கிடையாது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள்


1.வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய், சிறப்பு பணப் புழக்க திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு சந்தையில், இந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்களை, மத்திய அரசு வாங்கும். அதற்கு, மத்திய அரசு முழு பொறுப்பாகும். இதனால், இந்த நிறுவனங்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். இவர்களிடம் கடன் பெறும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, இந்தச் சலுகை, பேருதவியாக இருக்கும்.

2. குறைந்த மதிப்பீடு உள்ள நிதி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே உள்ள, பகுதி கடன் உறுதி திட்டம் தொடரும். இதன்படி, அந்த நிறுவனங்களின், முதல், 20 சதவீத இழப்பை, மத்திய அரசு ஏற்கும். இந்த திட்டத்தால், இந்த நிறுவனங்களிடம், 45 ஆயிரம் கோடி ரூபாய் பணப் புழக்கம் ஏற்படும்.

மின் பகிர்மான நிறுவனங்கள்


'டிஸ்காம்' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்கள், பெரும் நிதிச் சுமையில் உள்ளன. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய தொகையை அவற்றால் செலுத்த முடியவில்லை. இது ஒரு சுழற்சி போல், அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட நிலுவைத் தொகை, 94 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இத்தொகையைச் செலுத்தும் வகையில், 'டிஸ்காம்' நிறுவனங்களுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும். இதற்காக, 'டிஸ்காம்' நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி, மின் நுகர்வோருக்குக் கிடைப்பதை, மின் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கான்ட்ராக்டர்கள்


ரயில்வே, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, மத்திய பொதுப் பணித்துறை உட்பட அனைத்து அரசு அமைப்புகளுக்கான வேலைகளையும் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களுக்கான பணிகள், ஆறு மாதங்
களுக்கு நீட்டிக்கப்படுகின்றன. பணிக் காலமும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது; கூடுதல் கட்டணம், அபராதம் ஏதும் இதற்குக் கிடையாது. கான்ட்ராக்டர்களிடம் பணப் புழக்கம் இருக்கும் வகையில், அவர்கள் அளித்துள்ள வங்கி உத்தரவாதத் தொகையில் ஒரு பகுதி, அவர்களிடம் கொடுக்கப்படும்.

ரியல் எஸ்டேட்


மார்ச் மாதத்துடன் முடிக்க வேண்டிய கட்டுமானத் திட்டங்கள், கொரோனாவால் தாமதப்பட்டுள்ளதால், 'கடவுளின் செயல்' என்று கருதி, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இது குறித்து, மாநில அரசுகள், சுயமாக அறிவிப்புகளை வெளியிடலாம். இது தொடர்பாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை, மாநிலங்களை அறிவுறுத்தும். புதிய பணிக்களுக்கான அனுமதி மற்றும் நிறைவு சான்றிதழ் ஆகியவை, ஆறு மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்.

வருமான வரி சீர்திருத்தம்


1.சம்பளதாரர் அல்லாதோருக்கான, டி.டி.எஸ்., எனப்படும் வருமான வரி பிடித்தம், 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும், 2021, மார்ச், 31 வரை நடைமுறையில் இருக்கும். இதன் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் இருக்கும்.

2.தொண்டு நிறுவனங்கள், வர்த்தகமல்லாத நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான அனைத்து வரி, 'ரீபண்ட்'களும், உடனடியாக வழங்கப்படும்.

3.நடப்பு, 2019- 2020 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலம், அந்தந்தப் பிரிவினருக்கு ஏற்ப, ஜூலை, 31 மற்றும் அக்டோபர், 31 ஆக உள்ளது. இது, நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், வரி தணிக்கைக்கான காலம், செப்., 30ல் இருந்து, அக்., 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

4.இதைத் தவிர, செப்., 30ல் முடிவடையும் வரி மதிப்பீட்டுக் காலம், டிச., 31 வரையும்; 2021, மார்ச், 31ல் முடியும் மதிப்பீட்டுக் காலம், 2021, செப்., 30 வரையும் நீட்டிக்கப்படுகிறது. வரி தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் திட்டம், இந்தாண்டு, டிச., வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

THANKS FOR DINAMALAR 


No comments:

Post a Comment