Thursday, May 28, 2020

6.ஆனாயநாயனார்

பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

No comments:

Post a Comment